மெல்லத் தமிழினி சாகுமோ?தொடங்குங்கள் உங்கள் யுத்தத்தை.


தமிழும் நானும்:
சமீபத்தில்  துபாய் தமிழ் சங்கத்தில் நடந்த பொங்கல் சிறப்பு விழாவில்,தமிழில் எழுதப் படிக்க இலவசமாக வகுப்புக்கள்  எடுப்பதைப் பாராட்டி மலர்க்கொத்துக் கொடுத்து கொளரவித்தார்கள்.முதலில் வரவேற்பு உரையில் செயலாளர் திரு ஜெகன்னாதன் அவர்களும், நிகழ்ச்சியின் இறுதியில் உயர் திரு.தாஹா அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
அது மட்டுமல்லாமல் இந்த ஊரில்(துபாய்) வந்து ஒரு தமிழராக இருந்து பல பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு பெரிய முன்னணித் தொழிலதிபராகவும், அனைத்துத்  தமிழ் மக்களுக்கும்  சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கும் மதிப்பிற்குரிய உயர்.திரு .ஐயா சையது சலாவுதீன் (ETA-Managing Director)அவர்களின் கையினால் மலர்க்கொத்தினைப் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இன்று தமிழில் இலவசமாக வகுப்புக்கள் எடுக்க  நான்ஆரம்பித்தது திடீரென்று ஒரு நாளில் தொடங்கப் பட்டதில்லை.வெகு நாட்களாக என் மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு ஆதங்கமே ஆகும்.
பொதுவாக என் மனதில் தோன்றிய ஒரு சில கேள்விகளின் வெளிப்பாடே ஆகும்.  அக்கேள்விகளை  நீங்களும் சிந்திப்பீர்களாயின் தமிழ் என்றென்றும் அழியாது.
1.நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுடன் தமிழில் பேசுகின்றோம்?
2.எத்தனை பேர் ஆத்திச்சூடியை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றோம்?
3.எத்தனை பேர் திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லிக் கொடுத்திருக்கின்றோம்?
4.நம் குழந்தைகளுக்கு ஆங்கில நர்சரி ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கும் அன்னையரே! உங்கள் குழந்தைகளுக்கு “பாப்பாப் பாடல்”..அம்மா இங்கே வா போன்ற பாடல்களை சொல்லிக் கொடுத்திருகின்றீர்களா?
5.அவ்வளவு ஏன் அன்றாடம் நாம் உபயோகப் படுத்தும் பொருட்களின் தமிழ் பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்குத் தெரியுமா?
6.இப்படி நாம் மட்டும் தமிழைப் படித்து ரசித்துக் கொண்டிருக்கின்றோமே வரும் தலைமுறைக்கு அதனை எப்படி எடுத்துச் செல்வது என்று யாராவது சிந்தித்திருப்போமா?
இப்படி எல்லாம் என் எண்ண அலையில் நான் சிந்தித்ததன் விளைவே இந்த  சிறு முயற்சி  ஆகும்.
 எப்படி நம் குழந்தைகளுக்கு உணவு,உடை, நல்லபள்ளி,படிப்பு போன்றவை அத்தியாவசியமோ அது போலத் தமிழும் முக்கியம்...தாய் மொழியை நாம் நம்மால் முடிந்த வரை அவர்களுக்குப் புகட்ட வேண்டும்..ஏனெனில் வருங்காலம் அவர்களது/அவர்கள் மூலமாகத் தான் வரும் சந்ததியினரும் தமிழை அறிவார்கள்.
இன்றும் கூட நம்மில் பல பேர் தமிழில் பேசுவது அனாகரீகமான ஒரு விஷயமாக எண்ணி ஆங்கிலத்தில் பேசுகின்றோம்.மேலும் தமிழைப் படிப்பதனால் என்ன பிரயோஜனம்?ஏதாவது வேலை வாய்ப்புகள் கிட்டுமா?எதற்கு தமிழில் பேச வேண்டுமென எதிர்க்கும் கூட்டத்தினரும் நம்மிடையே உண்டு. அது மட்டுமல்லாமல் ஏதோ தமிழில் பேசினால் படிப்பறிவு இல்லாத ஒரு பட்டிக்காட்டானென்று நம்மை எண்ணி விடுவார்களென சிந்திப்போரும் உண்டு.இப்படி நாம் ஊருக்கும்,உலகுக்கும் அஞ்சி அஞ்சியே நம் மொழியை வளர்க்கத் தவறி விட்டோம். ஒரு சிறிய அளவிலான மொழிப் புரட்சியினை   நம் சமுதாயத்தினரிடம் உருவாக்க வேண்டும்.
அதற்கு முதலில் வீட்டிலேயே நாம் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்..குறைந்த்து 10 வயதிற்குள்ளாகவே தமிழைப் படிக்க வைக்க வேண்டும்..இதில் வெட்கப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால்  நான் இலவசமாக தமிழ் வகுப்புக்கள் எடுத்து வருகின்றேன்....(அதுவும் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளில்,தொழுகை நேரத்திற்கு முன்பே வகுப்பை முடித்தும் விடுகின்றேன்.)அப்படி இருந்தும் கூட நிறையப் பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.
அதற்கான காரணத்தைக் கேட்டால் அரபிக்,ஆங்கிலம்,இந்தி போன்ற மொழிகள் நிறையப் படிக்க இருப்பதனால் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லையென்று பெற்றோர்  கூறுகின்றனர். ஆனால் ஒரு குழந்தையால் பல மொழிகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ள முடியும்..உண்மையில் பெற்றோரான நாம் தான் அதற்காக நேரமும் ஒதுக்குவதில்லை,முயற்சியும் செய்வதில்லை...
 நானும் அப்படி ஒரு பெற்றோராகத் தான் சில காலம் வரை இருந்தேன்..என் மகனுக்கு 7 வயதாகும் வரை.திடீரென்று அவன் ஆங்கிலத்தில் கதைகள் படித்த பொழுது தான் என் சிறு வயதையும் நான் விதம் விதமாகப் படித்த தெனாலி ராமன் கதைகளையும்,முல்லாக் கதைகளையும்,சித்திரக்கதைகளையும்,அம்புலி மாமாவையும்  நினைத்தேன்..அப்பப்பா நம் தமிழில் தான் எத்தனை வகை வகையான கதைகளும்,புத்தகங்களும் இருக்கின்றன!
பின்னர் படித்து மகிழ்ந்த பாரதியையும்,பாரதி தாசனையும் எண்ணினேன்.தரமான தமிழ் கதைகள்,கவிதைகள் அனைத்தும் வெறும் இந்த சந்ததியினருடன் அழிந்து போவதா?ஆண்டாண்டு காலத்துக்கும் அந்த எழுத்துக்கள் வாழ வேண்டாமா?இன்னிலை தொடர்ந்தால் என் மகனுக்குத் தமிழில் படிக்கத் தெரியாமல் போகும்,அவன் மகனுக்குத் தமிழில் பேசவே தெரியாமல் போகும்,அவன் மகனுக்குத் தமிழ் என்றால் என்னவென்றே தெரியாமல் போகும்...தமிழ் அழிந்து போகும்.. நான் காதலித்த பாரதியின் எழுத்துக்களை என் சந்ததியினரால் அனுபவிக்க இயலாமல் போகும் அவலத்தை எண்ணினேன்..வெட்கினேன்...தலை குனிந்தேன்...அன்று என் மனதில் தோன்றிய ஒரு வித்துத் தான் தமிழ் மொழியை இன்றே என் மகனுக்கு மட்டுமல்ல..அவன் போல இருக்கும் சிறுவர்களுக்கும் என்னாலான வரை பயிற்றுவிப்பதென...ஆதலால் பெற்றோரே சிந்தியுங்கள்...செயல் படுங்கள்...
நம் தாய் மொழியான தமிழைக் காக்கப் போராடுங்கள்...வீட்டிலேயே தொடங்குங்கள் உங்கள் யுத்தத்தை....வெற்றி நமக்கே....

Comments

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்