எங்கே நம் தமிழர் பண்பாடு?

அமீரகத்தில் வாழும் தமிழர் மட்டுமல்ல இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு நம் தமிழரின் நாகரீகம்,பண்பாடு போன்றவைகள் இல்லாது போனது மிகவும் வருத்தத்துக்குரியது.அதற்காக ஒட்டு மொத்தமாக அனைத்துத் தமிழரையும் நான் குறை சொல்லவில்லை, நான் பார்த்த சில அல்ட்ரா மாடர்ன் தமிழர்கள் (அவர்களை வேறு எப்படி தமிழில் சொல்வதென்று தெரியவில்லை ) பற்றிய ஒரு சிறு தொகுப்புத் தான் இது.
இதில் உள்ள சிறு சிறு குறைகளை எல்லாம் தவிர்த்து, நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்,மேலும் இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதவில்லை,பொதுவாக என் மனதில் படிந்தவை,பிறர் சொல்லிக்கேட்டவைகளை இங்கு கருத்தாகப் பதிவாக்கியிருக்கின்றேன்,இதன் மூலம் யார் மனதாவது புண் பட்டால் தயவு கூர்ந்து என்னை மன்னித்து ஒரு இனிய சினேகிதியாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தை வளர்ப்பு:
ஒன்றுமில்லை யாராவது நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எத்தனை குழந்தைகள் நம்மை வரவேற்கின்றன?எப்போ மம்மி உன் ஃப்ரண்டு கிளம்புவாங்க அப்படின்னு நம் காது படவே கேட்கும் பிள்ளைகள் நிறைய உண்டு.அது கூடப் பரவாயில்லை,பெரியவர்களே சில சமயம் ரொம்ப முக்கியமாக டி.வியில் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.ஏதோ கடனே என்று பேசுவார்கள்,ஆனால் கண் மட்டும் தொலைக்காட்சியில் தான் இருக்கும்.சரியாக நாடக இடைவெளியில் பேசுவார்கள்.
இவர்கள் இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி இருக்கும்?அவர்களும் நாள் பூரா பென் 10, ஸ்பைடர்மேன், டாம் அண்ட் ஜெரி இப்படி வகை வகையாக பார்க்கிறார்கள். நாமெல்லாம் சிறுவர் சிறுமியராய் இருக்கும் போது இப்படியா வளர்ந்தோம்?பாண்டி,கபடி,கிட்டிப்புல்,பல்லாங்குழி இப்படி எத்தனை வகை விளையாட்டுக்கள் இருக்கு? எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுடன் இந்த மாதிரி விளையாடி இருக்கீர்கள்? வேலைக்குப் போகும் பெண்களோ நாள் பூரா வேலை என்று விடுமுறையை நிம்மதியாய் செலவிடுவார்கள், இல்லத்தரசிகளோ நம்மைப் போல பாரு அந்த பெண்ணுக்கும் எவ்ளோ கஷ்டம் என்று சொல்லி உருகி உருகி சீரியல் பார்ப்பார்கள்.
உணவு:
அது மட்டுமா சாப்பாட்டு விஷயத்திலும் பெரிசாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.என்னமோ அவர்கள் பிள்ளைகள் pizza,burger தவிர வேறு எதையும் விரும்பி உண்ணுவதில்லையென்று பெருமை பேசும் இல்லத்தரசிகள் பலரை நான் கண்டிருக்கிறேன்.ஏன் சுவை தரும் இட்லி,இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் எவ்வளவு ஆரோக்கியம்?சுவை தரும் பல சிற்றுண்டிகளைத் தயாரிப்பதற்கும் நேரமில்லை,பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை இல்லை.
இது எல்லாம் எல்லாத் தாய்மாருக்கும் பொருந்தாது,இன்னமும் கூட குழிப்பணியாரம்,தேங்காய் பன்,முறுக்கு என்று வீட்டிலேயே செய்து அசத்தும் பெண்களையும் நான் கண்டிருக்கிறேன்.
மொழிப்பற்று:
தம் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்று எண்ணிக்கொள்கிறார்கள்.அதுக்காக செந்தமிழில் பேச நான் யாரையும் சொல்லவில்லை,முடிந்த அளவு தமிழில் பேசலாமே,
இங்கு பள்ளிகளில் தான் கண்டிப்பாக ஆங்கிலம் பேசுகின்றனரே,குறைந்த பட்சம் வீட்டில் பேசிப் பழகினால் ஊருக்குப் போகும் போது தாத்தா பாட்டி உறவினரிடம் பேச இலகுவாக இருக்கும், ஆனால் பொதுவாக தமிழ் படிக்க வேண்டுமென்று சொல்லும் போது தடை போடுவது பெற்றோரே.கேட்டால் பாவம் அவளுக்கு ஏற்கனவே அரபிக்,இந்தி,போன்ற மொழிகள் இருக்கு,அதில் தமிழ் படிக்க நேரமில்லை என்று கூறுவார்கள்.இவர்கள் பிள்ளைகளுக்கு இலக்கணம்,இலக்கியம் அளவுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம்,விடுமுறைக் காலங்களில் எழுத்துக்கூட்டிப் படிக்கும் அளவுக்காவது சொல்லிக் கொடுக்கலாமே, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய நம் மூத்தகுடி இப்படி அழிந்து போகலாமா?
ஆனால் எனது வில்லுப்பாட்டு நிகழ்ச்சி பார்த்து விட்டுத் தமிழ் பயில வந்த ஒரு சிலரும் உண்டு,அதனைக் கண்டு நானே இப்பொழுது ஒரு சில தமிழ் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறேன்.அதனால் மொழி அறிவு மிகவும் அவசியம்,தமிழையும் அதன் அழகையும் தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்குப் புகட்டுங்கள்.
உபசரிப்பு:
அடுத்தது உபசரிப்பு, நிறையப் பேர் பார்க்கும் போதெல்லாம் வாய் வார்த்தைகளாக வீட்டுக்கு வாங்க, வீட்டுக்கு வாங்க என்றெல்லாம் வலிய வலிய அழைப்பார்கள்.சரி நம் மேல் தான் எவ்ளோ ஆசை நம்மள மதிச்சுக் கூப்பிடுறாங்களேன்னு தப்பித் தவறிப் போய் தான் பாருங்கள் தெரியும்.
அட நீங்கள்லாம் நம்ம வீட்டுல எங்க டீ,காப்பி சாப்பிடப் போறீங்க?வரும் போதே எதாவது சாப்பிட்டுத்தானே வந்திருப்பீங்க.அப்படீனு ஒரு ஜோக்( நாமோ சரி ஆசையாய் கூப்பிட்டு இருக்காங்கனு வயித்தக்காயப் போட்டுக்கிட்டுப் போயிருப்போம்) சரி சரி என்ன சாப்பிடுறீங்கனு சும்மா ஒரு மரியாதை நிமித்தம் (ஃபார்மாலிட்டி) கேட்டால் அதுக்கு மேல் எப்படிச் சாப்பிட முடியும்?இந்த அழகுல அடுத்த வாட்டி வரும் போதாச்சும் கட்டாயம் ஏதாச்சும் சாப்பிட்டு போகணும் அப்படிம்பாங்க.( அடுத்த வாட்டி அங்கே நாம தலை வச்சுப் படுப்போமா?போனாலும் சாப்பிடாமல் இதே மாதிரித் தான் வர வேண்டியிருக்கும்)
இன்னும் சில வீடுகளில் வேறு மாதிரி,யாராவது வருவதாகச் சொன்னால் கூட அட்டா இப்பப் போய் வரேன்னு சொல்றீங்களே, நாங்களே வெளில தான் கிளம்பிட்டு இருக்கோம்,இன்னொரு நாளைக்கு வாங்க அப்படினு சொல்வாங்க.ஏனிப்படி?
நம்மைப் பார்க்க நேரில் வருவதாக சொல்கிறார்களே முக்கியமான வேலை இல்லாவிட்டால் அவர்களை முதலில் கூப்பிட்டு சிறிது நேரம் பேசி ஏதாவது குடிக்கக்கொடுத்து அனுப்பணுமென்ற எண்ணமே இவர்களுக்கு ஏன் வருவதில்லை?இதே போல் நாமும் இவர்களிடம் நடந்து கொண்டால்?
அது மட்டுமில்லாமல் பக்கத்தில் இருப்பவர்கள் யார் யாரென்று கூடப் பலருக்குத் தெரியாது,அறிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்
வந்தாரை வரவேற்கும் தமிழகம் என்று பேர் பெற்ற தமிழ் நாட்டிலிருந்து வந்து,இங்கே சரியாக உபசரிக்கத் தெரியாவிடில் நம் பண்பாடு எங்கே?
ஆனால் இதுவே இன்னுமொரு குடும்பதில்லே கண்டது மிகவும் ஆச்சரியப்பட வைத்ததும் கூட நான் சென்றதுமே அவர்கள் வீட்டு சிறுமி எனக்குக் குறிப்பறிந்து தண்ணீர் கொணர்ந்து வைத்தாள்.வேண்டாம் வேண்டமென்று சொல்லச் சொல்ல அப்படி ஒரு உபசரிப்பு,கனிவு,ஆஹா இன்னமும் ஒரு சிலர் மாறாமல் இருக்கிறார்களே அவர்களையெல்லாம் நான் தலைகுனிந்து வணங்குகிறேன்.
இது எல்லாரைப் பற்றியும் நான் சொல்லும் குற்றச்சாட்டு இல்லை,ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நானே பெண் இனத்தைப் பற்றிக் குறை சொல்வேனா? சகோதரிகளே நாம் திருத்திக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பதைத் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
தற்பொழுது மாறி வரும் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு அன்பு சினேகிதியின் ஆதங்கமே இந்தக் கட்டுரை.
                                                                             அன்புடன்,
                                                                   உங்கள் தோழி ரேணு
 
 

Comments

  1. Extremely well written Renu...

    My hearty congratulations to you...

    Write more such articles and share your views with us..

    Keep rocking.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

திடீர் ஞானோதயம்