பெண்ணியம்-சென்ற வருடம் நான் எழுதிய ஒரு கட்டுரை

பெண்ணியம்


பெண்ணியம் –கேட்பதற்கு சுலபமான வார்த்தையாகத் தெரியலாம், ஆனால் இன்னது தான் பெண்ணியம் என்று யாராலும் இன்னமும் வரையறுக்கப் பட முடியாத விஷயம்,எனக்கு சரி என்று தோன்றுவது இன்னொருவரின் பார்வையில் தவறாகவும் தோன்றலாம்,என்னைப் பொறுத்த வரை பெண்ணியம் என்றால் என்ன என்று இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..                                                         
பெண்ணியம் என்றால் என்ன?
பெண்ணியமென்றால் என்னவென்று ஒரு பெண்ணியவாதியிடம் கேட்டேன். ஒரு ஆண் என்னவெல்லாம் செய்கின்றானோ அத்தனையையும் ஒரு பெண்ணாலும் செய்ய முடியுமென்பதைக் கூறுவதே பெண்ணியமென்று சொன்னார். சரி ஒரு இல்லத்தரசியிடம் கேட்கலாமென்றெண்ணிக் கேட்டேன். ஏதோ கேட்கக்கூடாத ஒரு கெட்ட வார்த்தையைக் கேட்ட மாதிரி என்னை முறைத்துப் பார்த்தார்.என்ன செய்வதென்று யோசித்து விட்டு நானே களமிறங்கி ஆய்வு செய்து பார்த்த போது “பெண்ணியம்என்றால் என்னவென்று புலப்பட்டது.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடாத்த வந்தோம்.. எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி....
என்று பெண்ணியம் பற்றி அந்நாளிலேயே பாரதி பாடியிருக்கின்றான்.
ஆனால் இந்தப் பெண்ணியம் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இன்று பல பெண்கள்,அவர்களுக்கான அடையாளங்களையே இழந்து கொண்டிருக்கின்றனரென்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மையாகும்..முதலில் பெண்ணியம் எப்பொழுது தொடங்கியதென்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஆதிகாலத்துப் பெண்:
ஆதிகாலத்தில் ஆண்களை விடப் பெண்களே சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளனர்.ஒரு தாயாக ஆகக் கூடிய சிறப்பு பெண்ணுக்கே இருப்பதனால் அவளிடம் ஆணுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.
ஆதி காலத்து மனுஷி மிகவும் பொறுமையானவள்.சகிப்புத்தன்மை உடையவள்.மிகவும் திறமையாகவும், நிதானமாகவும் முடிவுகளை எடுக்கும் வல்லமை உடையவளாகவும் இருந்த்தால் தலைமைப் பதவி அவளைத் தேடியே வந்தது.
சிறிய சிறிய குழுக்களாக வசித்து வந்த அந்த காட்டு வாசிகளின் கூட்டங்களுக்கு அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டியே தலைவியாக இருந்தாள்.மேலும் ஒரு
இடத்திலிருந்து மற்றுமொரு குழுவின் வசிப்பிடத்திற்கு வேற்று மனிதர்கள் செல்லும் போது அவர்கள் பாதுகாப்புக் கருதி அவர்களைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள்.
அது போன்ற தருணங்களில் ஒரு வயதான மூதாட்டியையே அவர்கள் சமாதானத் தூதுவராக அனுப்புவார்கள்.ஏனெனில் பெண்களை யாரும் கொல்ல மாட்டார்களென்று...இங்கனம் ஆதிகாலத்துப் பெண் ஆளுமையோடு வசித்ததாகத் தான் வரலாறுகள் கூறுகின்றன....
புராண காலப்பெண்:
புராண காலத்தில் கிட்டத்தட்ட 32 பெண் ரிஷிகள் இருந்தனரென வேதங்கள் கூறுகின்றன.ஆரம்ப கால கட்டங்களில் இந்து மதத்தில் மட்டுமன்றி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களிலும் பெண்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனரென சான்றுகள் கூறுகின்றன.
இடைக்காலப் பெண்:
இவள் ஆதி காலத்துப் பெண்ணிடமிருந்து மாறு பட்டு உருவகப் படுத்தப் பட்டிருக்கிறாள். தற்காலத்தில் பரவி வரும் லிவிங் டுகெதர்கலாச்சாரப்படி ஆதிகாலத்தில் ஒருவருடன் ஒருவர் இருந்தபோது,பெண்களின் சிறப்பை உணர்ந்து கொண்ட ஆண்கள் ,அப்பெண்களைத் தனக்கு மட்டுமே உரியவளாக வரித்துக் கொள்ளத் தொடங்கிய போது திருமணம் என்ற முறை தோன்றியது.
பின்னர் அவள் தன்னை சார்ந்து இருக்க வேண்டுமெனத் தோன்றிய போது குழுக்களின் தலைவனாக ஆண் ஒருவன் இருக்க வேண்டுமெனவும் தோன்றியது. அவனைப் பலசாலி,  போர்களில் வல்லவனெனவும் உருவகப் படுத்தி,திறமையான பெண்களை அவனுடைய வாழ்க்கைத் துணையாகவும்,இல்லறம் மற்றும் அவனுடைய பணிவிடைகள் செய்யவும் மாற்றிக் கொண்டானாம்.
இயல்பிலேயே அன்பும்,கருணையும்,சகிப்புத்தன்மையும் கொண்ட அப்பெண்டிரும் அவர்கள் கொடுத்த பணிகளையே செவ்வன செய்து வந்தனர்.
பின்னர் பெண்களென்றால் இப்படித் தானென்ற கோட்பாடும் கூடவே ஏற்பட்டது.அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கும் பெண்களின் கூடப் பிறந்த சொத்தாக உருவகப்படுத்தப்பட்டது.
பின்னர் தோன்றிய தொல்காப்பியத்திலும் தலைவி,தன் தலைவனை எண்ணி ஏங்குவதும், அவனுக்கான பணிகளை செய்து வீட்டினை நிர்வாகிப்பதுமாக இவளது பங்கு பெரும்பாலும் இல்லறம் சார்ந்த்தாகவே கூறப்பட்டுள்ளது. ஆனாலும் போரில் பங்கு கொண்ட பெண்டிருமுண்டு,அவர்கள் சிறுபான்மையோரே..மேலும் அவர்கள் அரசகுலத்தில் உதித்தவர்கள்.சாதாரணப் பெண்களை, ஆண்களைச் சார்ந்தே உருவகப் படுத்தியுள்ளனர்.
ஆனால் பல படித்த பெண்டிரும் இக்கால கட்ட்த்தில் இருந்து வந்துள்ளனரென்பது சற்று வியப்பாகவுள்ளது. சங்க காலப் பெண்பால் கவிஞர்கள் என்று பார்த்தால் 26 கவிஞர்களைக் குறிப்பிடலாமாம்.
இருப்பினும் பெண்ணடிமைத் தனத்தையும் இக்கால கட்ட்த்தில் தான் கொண்டு வந்துள்ளனர். மேலும் இக்கால கட்ட்த்தில் வெளியே செல்லும் ஆண்கள் தன் சுகத்திற்காக வேறு பெண்டிரை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.அப்பெண்களை பரத்தையர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.சுகம் நாடிப் போகும் தலைவன் மட்டும் பெரிய காவியத்தலைவன்,ஆனால் அவனுக்கு சுகம் கொடுப்பவள் மட்டும் கெட்டவளா?இரு கை சேர்ந்தால் தானே ஒசை?மேலும் ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமென்றாலும் செய்யலாமென்றும்,பெண்ணானவள் காலங்காலமாய் கணவனே கண் கண்ட தெய்வமென்று அவன் காலடியிலேயே கிடப்பதாகவும் இக்கால கட்டங்களில் தான் கூறப்பட்டுள்ளது.
மேலும் கற்புக்கரசியாகக் கண்ணகியையும்,பரத்தை வீட்டில் தன் கணவனைக் கூடையில் சுமந்து சென்ற நளாயினியையும் போற்றிப் பல படைப்புக்களும் உருவாக்கப் பட்டன.
கடந்த சில நூற்றாண்டுகளில் பெண் (1700-1970)
இக்கால கட்டத்தில் பெரும்பாலும் பெண்களே தங்களுக்குரியதாக சில அசட்டுக் கோட்பாடுகளை வரித்துக் கொண்டு வாழத் தொடங்கி விட்டனர்,அதனால் ஆண்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று.விதிமுறைகளை மீறும் பெண்களை மற்றப் பெண்களே தூற்றவும் தொடங்கினர்.
தங்களது பிள்ளைகளிடமே வேறு பாட்டைக் காட்டத் தொடங்கினர்.ஆண் பிள்ளைகளை ஒரு மாதிரியும் பெண்களை வேறு மாதிரியும் ஒரு பெண்ணாகிய தாய்மார்களே வளர்க்கத் தொடங்கினர். சிறு வயதிலிருந்தே கண்ணகியின் கதைகளைக் கூறியும்,சிறு சிறு வீட்டு வேலைகளை பழக்கியும் வளர்த்த பெண்கள் ஆண்களை எவ்விதக் கட்டுப் பாடுமின்றி கட்டறுந்த காளை போல வளர்த்தனர்.படிப்பிலும் அது போலவே.
பெண்களை அளவோடு படிக்க வைத்தனர்,ஆனால் ஆண்களையோ விரும்பிய வரை படிக்க வைத்தனர்.வேலை கூடப் பெண்களுக்கு ஒத்து வருவதாக அவர்கள் எண்ணிய ஆசிரியர்,குமாஸ்தா போன்ற ஒரு சில வேலைகளுக்கு மட்டுமே அனுப்பினர்.
அது மட்டுமா?வீட்டிற்கு வரும் மருமகள்களையும் தங்கள் மகனுடன் ஒத்துப் போய் வாழப் பணித்தனர். பெண்ணுக்குப் பெண்களே எதிரி ஆயினர். வந்த மருமகளும் அனுசரித்து அனுசரித்துப்போய் அவளுக்கென்று உள்ள சொந்த விருப்பு வெறுப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் மரக்கட்டையாகவே மாறி விடுகின்றாள்.அவளுடைய கலைத்திறனோ, அறிவுத்திறனோ கூர்மைபெறாமல் மழுங்கிப் போய்விடுகிறது.
அதனாலேயே ஒரு சுயமாக முடிவு எடுக்கும் திறனை இழந்து விடுகின்றாள்.கணவனையே சார்ந்து இருக்கின்றாள்.மீறி விதிவிலக்காக இருந்து வரும் பெண்களைத் தன் இயலாமையின் வெளிப்பாட்டினால் பெண்களே ஒதுக்குகின்றனர்.மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
மனைவியை இழந்த கணவனோ புது மாப்பிள்ளை,ஆனால் மனைவியொ விதவை.கைம்பெண் என்ற வார்த்தயைக் கூட உபயோகிப்பதில்லை,ஏனெனில் அதில் ஒரு பொட்டு உள்ளதே...விதி முறைகளை மீறி வண்ணப் புடவை உடுத்தினாலோ,பூவும் பொட்டும் வைத்தாலோ பெண்கள் கூட்டமே அவளைப் பற்றி அவதூறு சொல்கின்றது.மேலும் ஒரு ஆண் எத்தனை தவறுகள் செய்தாலும் அவனை மன்னித்து ஏற்கும் சமூகம் அவனால் கெடுக்கப்பட்ட  பெண்களைத் தூற்றுகின்றது.
அது மட்டுமா?ஒரு ஆணை விட பெண் அதிகம் படித்திருக்கக் கூடாது,அவனை விட மேலான உயர் பதவியில் இருக்கக் கூடாது,இருந்தாலும் வீட்டில் அவனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செவ்வனே செய்ய வேண்டுமென்று எத்தனை எத்தனை விதிமுறைகள்?மேலும் ஒரு பெண் பல பட்டங்கள் படித்து அயல் நாடு சென்றாலும் அவள் குடும்பம் என்ற வட்டத்துக்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.
ஒரு பெண் குடும்பமில்லாமல் இந்த சமூகத்தில் தனித்து வாழ்ந்தால் அவளுக்குக் கிடைக்கும் பெயரும் அவமரியாதையும் எண்ணிலடங்கா.ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆணுக்கும் பெரும் பங்கு உண்டு.ஆனால் பெண் தான் மலடி என்ற அவப்பெயருக்கு ஆளாகின்றாள், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் படுகின்றாள்.இதை விட வேறென்ன கொடுமை வேண்டும்?
மேலும் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கோ அதன் தந்தை பெயர் தான் இனிஷியலாக வைக்கப் படுகின்ற்து.10 மாதங்கள் கருவிலே சுமந்த தாய்க்கு எந்த உரிமையும் இல்லையா?
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று வகுத்து பெண்ணடிமைத் தனத்தை
சட்டமாக்கிய இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் விழிப்புணர்வு ஆங்கில
ஆட்சிக்குப் பின்னரே பெண்களுக்கு ஏற்பட்டது.
பெண்களுக்குச் சுதந்திரம், உரிமை, விதவை மறுமணம், உடன்கட்டை எதிர்ப்பு, பெண்கல்வி என்று பெண்ணியம் அச்சமயத்தில் தான் விழிப்புணர்வு பெற்றது.அது போல பெரியார்,பாரதியார் போன்ற ஆண்கள் பெண்ணியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பெண்ணியம் பற்றி எழுதும் எந்தக் கட்டுரையிலும் பெரியாரைப் பற்றி எழுதாமல் இருக்க வாய்ப்பில்லை.அந்த அளவிற்கு தமிழகத்தில் தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் மிகப்பெரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தின
புத்தகங்களூம் வாசிப்புக்களும் பெண்ணியத்தில் ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்கள் பரவலாக ஒரு மாற்றத்தைப் பெண்களிடையே உண்டு பண்ணியது.
  
தற்போது பெண்ணியம்(2000)
ஒரு காலத்தில் பெண்களுக்கு . ஓட்டுரிமை மறுக்கப்பட்டகாலம் போய் இன்று 33 விழுக்காடு இட ஓதுக்கீடு வரை கிட்டியுள்ளது. நாட்டின் முதல் குடிமகள்,மற்றும் நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கூடப் பெண் தான்.கூடிய விரைவில் இதுவே 50 விழுக்காடுகளாக மாறும்.
பெண்களால் இயலாதெனக் கூறப்பட்ட காவல் துறை முதல் விண்வெளி வரை பெண்கள் உயர்ந்திருக்கின்றனர்.கல்வியிலும்,கணினித் துறையிலும்கொடிகட்டிப் பறக்கின்றனர்.ஆண்களும் மாறி வருகின்றனர்.ஒரு சில பெண்கள் மாமியாராக இருக்கும் பட்சத்தில் இன்னும் பெண்ணை அடக்கி வைக்க முயல்கின்றனர்.வேறு சிலரோ பெண்ணியத்தை ஆயுதமாக கையாளத் தொடங்கி அப்பாவி ஆண்களைப் பழி வாங்கவும் தொடங்கியுள்ளனரென்பது வருத்தத்திற்குரியது.
இருப்பினும் இன்னமும் கடை நிலைகளிலும் கிராமப் புறங்களிலும் பெண்களை அடிமைகளாக நடாத்தும் அவலமும் நடை பெற்றுக்கொண்டு தானிருகின்றது.இன்னமும் நாளேடுகளில் எங்காவது ஒரு ஓரத்தில் பெண் சிசுக் கொலை,கணவனால் கொல்லப்பட்ட மனைவி,இப்படி ஏதாவதொரு பெண்ணுக்கு நிகழும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டு தானிருக்கின்றது.
பெண்ணியம் எனது பார்வையில்:
ஒரு பெண் என்பவள் யார்?அன்பும்,அரவணைப்பும்,சகிப்புத் தன்மையும் கொண்டவள் தானே.அவள் பெண்ணியம் என்ற பெயரில் தனது சுயத்தை இழக்கலாமா?
பெண்ணியம் என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று ஆண்களோடு சரி நிகர் சமானமாக வாழ்வதே ஆகும்.
இதில் அவனை விட உயர்ந்து என்று நான் குறிப்பிடவில்லை.யாரும் யாரையும் விட உயர்த்தி இல்லை,எல்லோரும் சமம். பெண்ணியம் என்ற பெயரில் திருமணம் செய்யாமல் வாழும் பெண்களும்,கு ழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாத பெண்களும் இந்த சமூகத்திற்கு அநீதி இழைக்கின்றனர்.
ஒரு ஆணுடன் இணைந்து பெண் வாழ்வது தான் இயற்கையின் நியதி.தாய்மை ஒரு பெண்ணுக்கே உரிய ஒரு உன்னதமான அனுபவம்,அவைகளை விட்டு விலகி ஒரு பெண் தனித்து வாழ்வது இயற்கைக்குப் புறம்பாகும்.
பெண்ணியம் பேசும் சகோதரிகளே,இவ்வுலகில் வெறும் பெண்கள் மட்டுமே இருக்க முடியுமா?ஆணும் பெண்ணும் இணைந்திருப்பது தானே உலகம்.சக்தியின்றி சிவன் இல்லை.அர்த்த நாரீஸ்வரரில் இல்லாத சித்தாந்தமா?
சிமோன் தி பூவாஎன்ற பிரெஞ்சு பெண் சிந்தனையாளர், தி செகண்ட் செக்ஸ்என்ற நூலில் முதல் தடவையாகப் பெண்ணியம்  பற்றிக் கூறியதென்ன தெரியுமா?ஒரு பெண் பிறப்பதில்லை உருவாக்கப் படுகிறாளென்று..அவளை இந்த சமூகம் தான் மாற்றுகின்றது. அதனால் முதலில் சமூகத்தில் தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.அதனைப் பெண் ஒரு ஆணுடன் இணைந்து தான் கொண்டு வர முடியும்.
என்னைப் பொறுத்த வரை ஆண்களோடு உடல் வலுவில் பெண்கள் போட்டியிட முடியாது, ஏனெனில் அவளது உடல் மென்மையானது,மாறி முயற்சித்தால் அவளது பெண்மையே மாறி கொஞ்சம் கரடு முரடாகி விடுகின்றது.அது போலவே பெண்ணிற்கென்று இருக்கும் சகிப்புத் தன்மை,பொறுமை,அன்பு,அனுசரிப்பு போன்ற  நற்குணங்களில் ஆண்களும் போட்டியிடவே முடியாது,அதுதான் இயற்கையின் கோட்பாடு.
எனவே மாற்றம் வேண்டும்,ஆனால் அது எது வரை என்ற ஒரு விதி முறை வேண்டும்.மேலும் தற்காலத்தில் பெண்ணியம் பற்றிப் பேசுவோரெல்லாம் மதத்தையும் அதனுடன் ஒன்று படுத்தி ஏதோ அவரவர் மதக் கோட்பாடுகளால் தான் காலங்காலமாய் பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டுள்ளதாக கூட சொல்லுவர்.
அவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் ஒரு பெண் உடலை மூடி புர்கா அணிவதனாலோ, புடவையோ,மடிசாரோ உடுத்துவதனால் அவளை சுதந்திரமற்றவளாக கருதுவதனை தயவு செய்து நிறுத்துங்கள்.பெண்ணியம் என்பது உடையில் அல்ல,கருத்தில் தான்.
ஒரு பெண் ஆணுக்கு நிகராக உடுத்தி விட்டால் அவள் சிறந்த பெண்ணியவாதியாக முடியாது. எப்பொழுது ஒரு பெண் சுயமாக முடிவெடுக்கிறாளோ,தான் முழுமையாக ஒரு பெண் என்பதனை உணர்ந்து செயல்படுகின்றாளோ அது தான் பெண்ணியம்.

Comments

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்