என் முதல் சிறுகதை

குறை ஒன்றும் இல்லை.....கண்ணா...


பதும நாபா...பரம புருஷா...பரம் ஜோதி ஸ்வரூபா.... விதுர வந்த்யா...விமல சரிதா...
சுருதி விலகாமல்அந்தக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதுளாவின் மனதெல்லாம் அவள் தாயார் சொன்ன வார்த்தைகளிலேயே ஒலித்துக் கொண்டிருந்த்து...
எத்தனை வாட்டி அதையே திருப்பி திருப்பிச் சொல்றது? நீ கண்டிப்பா இந்த தடவை அந்த டி.வில வர பாட்டுப் போட்டில கலந்துக்கத் தான் வேண்டும்,அதில முத பரிசு வாங்கி எனக்கு அந்த ஃப்ளாட் வாங்கிக் கொடுக்கணும்.உன் கிட்ட பாட்டு கத்துண்ட அந்த நீத்துக் குட்டி இப்ப ஜுனியர் சீசன்ல எப்படி ஜம்முன்னு பாடுறா...... பார்த்தியோ?நான் அவ அம்மாகிட்ட கூடக் கேட்டுட்டேன்,உன் கிட்ட இருக்கிற திறமைக்கு நீ அங்கே போனேன்னா  நோக்குத் தான் முத பரிசு நிச்சயம்கிறா...
நீ என்னடான்னா இந்தப் பாழாப் போன கர்னாடக சங்கீத்தை விட்டுட்டு வேற பாட்டு எதையுமே பாட மாட்டேன்ற...அப்புறம் எப்படி நாலு காசு பார்க்கிறது?போறாத்துக்கு இப்ப லேட்டஸ்டா குத்துப் பாடல்கள் எல்லாம் கொடுக்கிற அந்த ஃபேமஸ் இசையமைப்பாளரோட இசைல பாட வேற சான்ஸாம்டீ.....பிழைச்சுக்த் தெரிஞ்சிக்கோ...உங்கப்பனாட்டம் அசடா இருக்காத..தெரிஞ்சுதா..... “
அவள் தாயார் வத்சலா பாவம்,சிறு வயதில் சுகப்படாதவள்,எப்படியாவது பாடகி ஆக ஆசைப்பட்டு அது நிறைவேறாத தால் தன் பெண்ணாவது பேரோடும்,புகழோடும் பெரிய பாடகியாக வேண்டுமென தினம் தினம் இறைவனைப் பிரார்திக்கின்றவள்.அவளைப் பொறுத்த வரை பெண் பாடகியாகணும்,அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாள்.
தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 30 வருடங்களாக,சாதாரண குமாஸ்தாவாக ஒரே பதவியில் இருக்கும் அவள் தந்தை சாரங்கபாணியோ, அவள் தாயாரின் கண்களுக்கு அசடு...ஆனால் அவளுக்கோ உதாரண புருஷன்...
எதற்க்கும் ஆசைப்படாத ஒரு தகப்பன்,எது கிடைத்தாலும் திருப்தி அடையாத தாய்...என்ன ஒரு விந்தையான வாழ்க்கை?மிருதுளா தன் குடும்பத்தைப் பற்றி அசை போட்டுக் கொண்டிருந்தாள்.
மிகவும் சிறிய வயதிலேயே தாயின் உந்துதலால் இசை படிக்கப் போன மிருதுளா தான் பாடிக் கொண்டிருக்கும் போது தன்னைச் சுற்றியிருக்கும் உலகையே மறந்து போவதை உணர்ந்தாள். பாடும் பாடல்களின் பொருளை உணர்ந்த்தும் அதனை மேலும் ரசித்தாள்.அதுவே தன் வாழ்வு அந்த இசையில் தானும் பல சாதனைகளைப் படைக்கப் போவதை உணர்ந்தாள்.அதனால் அதனையே தனது படிப்பாகவும் எடுத்துக் கொண்டாள்.இப்பொழுது தன் 22வது வயதினிலே இசை பற்றி ஆராய்ச்சி பண்ணுகின்றாள்.எதற்க்கும் ஆசைப்படாத தந்தை கூட அவளின் இந்த ஆசையை ஊக்குவித்தாரே தவிர தடை ஏதும் சொல்லவில்லை..
பெரியதாக வருமானம்,சேமிப்பு ஏதுமில்லாததால்  நல்ல வேளை அவளின் திருமணம் பற்றிய பேச்சு அவ்வளவாக எழுந்த்தில்லை.ஆனால் தாயாரோ தன் பெண் எப்பொழுது சினிமாவில் பாடி,தனக்குப் பெரிய காரும்,வீடும் வாங்கிக் கொடுக்கப் போறாளெனத் தவமிருக்க ஆரம்பித்து விட்டாள்.
எப்ப அதற்கான முயற்சியைப் பண்ணுவாளெனத் தாய் காத்திருக்கும் போதே, தனது குரு நாதரின் ஆசியோடு வீட்டிலேயே பாட்டு வகுப்பு ஒரு சில குழந்தைகளுக்குஆரம்பித்தாள்.
முதலில் இதிலெல்லாம் என்ன பெரிய வருமானம் வந்து விடப் போகின்றதென மாய்ந்து மருகிய தாயார் அவளைத் தேடி மேலும் பலர் வந்ததும் சுதாரித்துக் கொண்டு, அவள் கற்றுக் கொண்ட இசையை வைத்து மேலும் எப்படி எல்லாம் பணம் ஈட்டலாமென்று கனவு கண்டாள்.
அதுவும் தற்பொழுது தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் நீங்களும் பாடலாம்என்ற அந்த பாட்டு நிகழ்ச்சியில் எப்படியாவது தன் மகளும் கலந்து கொண்டு முதற்பரிசாக வீட்டினையும்,அந்தப் பிரபல இசையமைப்பாளரிடம் ஒரே ஒரு குத்துப் பாட்டை மட்டும் பாடி விட்டாளெனில்,அப்புறம் அவள் தான் சூப்பர்,டூப்பர் ஹிட் பாடகி...என்று அடிக்கடி மனக்கோட்டை கட்டினாள்.அதன் விளைவே இப்பொழுது தெளிவாக சென்று கொண்டிருந்த மிருதுளாவின் வாழ்வில் புயலாய் வீசியது.மனம் மீண்டும் நனவுலகிற்கு வந்தது
குழந்தைகள் பதுமனாபாவை முடித்து விட்டு அடுத்து ஆனலேகரவைப் பாடிக் கொண்டிருந்தன.என்ன அக்கா !உடம்பு சரியில்லையா?இன்னக்கி நீங்க புது கீதம் சொல்லித் தறதா சொல்லியிருந்தீங்களே!சஹானா கேட்டாள்.மிகவும் சமத்துக் குழந்தை..எதைச் சொல்லிக் கொடுத்தாலும் வெகு விரைவில் கிரஹித்துக் கொள்வாள்.இப்படியான சிறுமிகளுக்குப் பாடச் சொல்லிக் கொடுப்பது என்ன ஒரு உன்னதமான கலை...மனதில் மீண்டும் சிந்தனை தலை தூக்கியது,,அதனைக் களைந்து விட்டு அச்சிறுமியை நோக்கிப் புன்னகையுடன்,ஆமாண்டா...அக்காக்கு ஃபைனல் அசெஸ்மெண்ட் ஒண்ணு இருக்கு..அப்புறம் ஒரு தீசிஸ் எழுதணும்...அதனால் அடுத்த வகுப்பில நான் புதுப்பாட்டு சொல்லித் தரேன்,இப்ப பழசையெல்லாம் நல்ல தரோவா ரிவைஸ் பண்ணுங்க...சரியா?.. மீண்டும் அடுத்த வகுப்பில சந்திக்கலாம்...மிருதுளா எழுந்தாள்...
சரி அக்கா.....அப்ப நாங்க கிளம்புறோம். அடுத்த வாரம் வரோம்.பை....ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் அசெஸ்மெண்ட்ஸ் அக்கா...சிறுமியர் கிளம்பி விட்டனர்...
மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் பாடி இருக்கக்கூடாதா?இந்த அம்மா வந்து திருப்பித் தொல்லை தரப் போறாளே....
அப்படியே இன்னும் சிறிது நேரம் அவள் காலாற மொட்டை மாடியிலேயெ உலாவினாள்.தொலைவில் பிள்ளையார் கோவில் மணி கேட்ட்து.சுந்தர வினாயகர்..மிகவும் பார்ப்பதற்கு சுந்தரமாவே இருப்பார்.எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனதிற்கு இனிமை தருவார்,சுந்தர வினாயகா!எனக்கு ஒரு பதில் சொல்லேன்....மீண்டும் மணி அடித்த்து.அந்தி சாய்ந்து கொண்டிருந்த்து...சூரியன் மேற்கே மெதுவாக சென்று கொண்டிருந்தான்... மனதில் ஒரு தெளிவு பிறந்தது.
இங்கே என்னடி பண்றே...?சாயங்காலம் காப்பி கூடச் சாப்பிடாம...ஓ  நாளைக்கு நடக்கப் போற குரல் தேர்வுக்காகப் ப்ராக்டீஸ் பண்றியா?அதெல்லாம் நோக்கு சர்வ சாதாரணம் டீ, நீ வேணாப் பாரேன்  உன் திறமைக்கு நீ ஷ்ரேயா கோஷலைத் தூக்கிச் சாப்பிட்டுவே....அம்மா நெட்டி முறித்து மகிழ்ந்தாள்.என் பட்டுக்குட்டிடீ நீ... அப்புறம் இப்ப வர நல்ல புதுப் படப் பாட்டாக் கேட்டுக் கத்துக்கோ சரியா?அந்த மாதிரி லேட்டஸ்ட் ஹிட்ஸ் தான் ஜட்ஜெஸுக்குப் புடிக்குமாம்,ஆங்....சொல்ல மறந்துட்டேண்டீ,,, அடுத்த வாரத்தில இருந்து நோக்கு டான்ஸ் சொல்லித் தர ஒரு அம்பியை ஏற்பாடு பண்ணியிருக்கேன்...ரொம்ப நன்னா சொல்லிக் கொடுப்பானாம்டி... “
.அம்மாவை அதிசயமாகப் பார்த்தாள் மிருதுளா.....உடனே பெருமையாகத் தொடர்ந்தாள் தாய்..என்னடா பாட்டுப் புரோகிராம் தானே டான்ஸ் எதுக்குன்னு நினைச்சுகாதடீ,இப்பல்லாம் நன்னாக் கண்ண மூடிண்டு நெக்குருகிப் பாடுறவாளை விட இடுப்பை அப்படியும் இப்படியும் லேசா ஆட்டிண்டு பாடினாத்தான் மார்க்ஸ் நெறயப் போடுவாளாம்.அதனால் நீ இப்ப இருந்தே டான்ஸ் கத்துண்டேனாத் தான் பெர்பார்மன்ஸ் ரவுண்டில அவுட் ஆகாமப் பாடலாம்.அப்பத் தான் ஃபைனல்ஸ் வரை போகலாம்”.
மள மளவென்று பேசிக் கொண்டே போன அம்மாவை  நிதானமாகப் பார்த்தாள் மிருதுளா.அம்மா என்னோட கனவெல்லாம் எம்.எஸ்.அம்மா மாதிரி ஒரு சிறந்த பாடகியாக வரது தான்,இறந்தும் பலரது மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறா பாரு..இன்னக்கும் காலங்காத்தால அவாளோட சுப்ரபாதத்தைக் கேட்காம உன்னால இருக்க முடியுமா?எனக்கு அந்த மாதிரிப் பேரும் புகழும் தான் வேண்டும்....சும்மா...இந்த மாதிரி சினிமாவுல பாடி எனக்கு சம்பாரிக்க வேண்டாம்...
“ நன்னாயிருக்குடி நீ சொல்றது,அவாளே “பக்த மீராஎன்கிற பட்த்துல நடிச்சிருக்கா தெரியுமோ?அப்புறம் என்னடீ குழந்தை,உங்கம்மா நான் கச்சேரி பண்ணனும்னு ஆசைப்பட்டேன்,என்ன பிரயோஜனம் வெறும் தேங்காய் மூடிக் கச்சேரி தான் அமைஞ்சுது,அதுக்கெல்லாம் பிராப்தம் வேணும்டீ.. பேசாம நான் சொல்றதைக் கேட்டு முன்னேறுற வழியைப்பாரு..
வேணாம்மா...எம்.எஸ் அம்மா நடிச்சப்ப இருந்த காலம் வேற இப்ப வேற. நீ உடனே மத்த கர்நாடக சங்கீதம் பாடறவால்லாம் சினிமால பாடலயாம்பே...அது அவா அவாளோட இஷ்டம்.மத்தவா எப்படியிருக்காங்கிறது எனக்கு முக்கியமில்லை,எனக்கு அந்த மாதிரிப் பாட்டெல்லாம் ஒத்து வராது.அவ்ளோ தான் மேலும் எனக்கு அதில ஆத்ம திருப்தியும் கிடைக்கிறதில்லை,அதனால என்னால அந்த மாதிரிப் போட்டில எல்லாம் கலந்துக்க முடியாதும்மா.....சாரி...என்று தெளிவாக சொன்ன மிருதுளாவை அதிர்ச்சியாய்ப் பார்த்தாள் தாய் வத்சலா..எங்கேயோ தூரத்திலிருந்து எம்.எஸ்ஸின் குறை ஒன்றுமில்லை பாடல் அவள் காதில் தெள்ளத் தெளிவாக கேட்டது.

Comments

Popular posts from this blog

கீதையின் சாரம் என் வாழ்வில்

எங்கே நம் தமிழர் பண்பாடு?

திடீர் ஞானோதயம்